பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானின் தேசிய தினத்தில் கலந்து கொள்வதற்காக 2018 மார்ச் 22 தொடக்கம் 24 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் பாகிஸ்தானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சிறிசேன பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஷாஹிட் காகன் அப்பாசி ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான இளைஞர் அபிவிருத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் பாகிஸ்தான் வெளிநாட்டுச் சேவை அகடமி, இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிறுவகம் மற்றும் இஸ்லாமாபாத் மூலோபாய கற்கைகளுக்கான நிறுவகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாகத்திற்கான நிறுவகம் மற்றும் பாகிஸ்தான் பொதுக் கொள்கைக்கான தேசிய பாடசாலை ஆகியவற்றுக்கிடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடும் நிகழ்விலும் பங்குபற்றவுள்ளார்.
ஜனாதிபதி சிறிசேன தனது விஜயத்தின் போது இஸ்லாமாபாத்திலுள்ள இராஜதந்திர வளாகத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ள சர்வதேச பௌத்த நிலையத்தை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.