ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் வெளிநாட்டுத் தூதுவர்களையும் இராஜதந்திரிகளையும் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. புதிய பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் தீர்மானத்திற்குக் காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை இதன்போது ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
புதிய பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் தீர்மானத்திற்குக் காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை இதன்போது ஜனாதிபதி தூதுவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த வெளிநாட்டு தூதுவர்கள்,
நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப நாட்டினுள் அமைதியைப் பேணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர். நாட்டின் அரசியல் அமைப்பிற்கேற்ப தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமையவே, தான் பிரதமரை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் என்ற வகையில், அணிசேரா கொள்கைக்கேற்ப அனைத்து நாடுகளுடனும் இருந்து வரும் உறவுகளை மேலும் பலப்படுத்தி முன்கொண்டு செல்வதற்கும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும்
அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமாதானம் மற்றும் அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, பலமாக முன்கொண்டு செல்வதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்ஹ, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.