எதிர்க் கட்சித் தலைவராக இருக்கின்றபோதும் இரா.சம்பந்தன் அரசு சொல்கின்றவற்றையே செய்கின்றார். அவர் தனது சொந்தத் தேவைக்காகவே அந்தப் பதவியில் உள்ளார், நாட்டுக்காக அல்ல’’ என்று நேற்று நல்லூரில் நின்று குற்றஞ்சாட்டினார் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார.
வாசுதேவ நாணயக்கார நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவர் நல்லூர் முருகன் ஆலயம் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். சுவாமி தரிசனத்தின் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நான் தனிப்பட்ட தேவைக்காகவே யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணத்தில் எனக்கு தமிழ் அரசியல் நண்பர்கள் உள்ளனர். அவர்களைச் சந்திப்பேன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நிதி நிலைமை மற்றும் செயற்பாட்டு நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் அதை எதிர்கொள்ள முடியாது நஞ்சருந்தும் நிலைமைக்கு உள்ளாகின்றனர்.
தமிழ் மக்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். அவர்களுக்குரிய சரியான தீர்வு வழங்கப்பட வேண்டும். இரா.சம்பந்தனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்தது. ஆனால், அவர் அரசு சொல்கின்றவற்றையே செய்கின்றார் – என்றார்.
வாசுதேவ நாணயக்காரவுடன் அவரது ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ்.மோகன், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தேசிய இணைப்பாளர் ஜி.ரி.திலககிரி, மத்திய மாகாண கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜெ.பிரேமதாஸ் ஆகியோரும் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டனர்.