குயின்டன் டிகொக் – ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரின் வலுவான ஆரம்ப துடுப்பாட்டத்தினால் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும் தென்னாபிரிக்காக அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரை தென்னாபிரிக்காக 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக குசல் ஜனித் பெரேரா 39 ஓட்டங்களையும், சமிக கருணாரத்ன 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்கா சார்பில் ஃபோர்ட்யூன், ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்க்ரம், மஹாராஜ் மற்றும் முல்டர் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
121 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 14.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றியை பதிவு செய்தனர்.
ஆரம்ப வீரர்களாக டிகொக் தனது ஐ.சி.சி. டி-20 கிரிக்கெட் வடிவில் 11 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன், மொத்தமாக 42 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றார்.
மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹெண்ட்ரிக்ஸ் ஐ.சி.சி. டி-20 கிரிக்கெட் அரங்கில் தனது 7 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன், மொத்தமாக 46 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா டி-20 கிண்ணத்தை கைப்பற்றிய அதேவேளை இலங்கை,சொந்த மண்ணில் முழு தொடரையும் இழப்பது இதுவே முதல் முறை. போட்டியின் ஆட்டநாயகனாவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் டிகொக் தெரிவானார்.