இலங்கையின் அபிவிருத்தியில் சகல வழிகளிலும் இந்தியா முக்கிய பங்காளியாக இருக்கும். அந்த வகையில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையை தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
இந்தியாவின் பிரபல பயண முகவர் நிறுவனமான இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாடு வியாழக்கிழமை (06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவும் , இந்திய மக்களும் சகல வழிகளிலும் பங்காளிகளாக இருப்பர். இந்திய பயண முகவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடானது இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்று நம்புகின்றேன்.
மதம் , கலாசாரம் , ஜனநாயகம் , மொழி என பல்வேறு துறைகளில் இலங்கை மற்றும் இந்தியா ஒருமித்த பண்புகளைக் கொண்ட நாடுகளாகக் காணப்படுகின்றன.
இவ்வாறான மாநாடுகள் , சுற்றுலாக்களின் மூலம் பெருமளவான இந்தியர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதன் ஊடாக மேற்கூறப்பட்ட காரணிகளின் முக்கியத்துவத்தை உணர முடியும் என்பதோடு , அவற்றை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கன.
கடந்த 5 மாதங்களாக யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கிடையில் வாரத்துக்கு 4 விமானங்கள் இருவழி பயண சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
குறித்த விமான சேவையை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு இந்தியா அதிகளவான ஒத்துழைப்புக்களை வழங்குவதன் ஊடாக , ஏனைய நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பும் ஏற்படும்.
அது மாத்திரமின்றி இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக்கள் டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக மேம்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்திய பயண முகவர் சங்கத்தினால் இவ்வாறானதொரு மாநாட்டை ஒருங்கமைத்தமைக்கு மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.