சினிமாவை கிண்டல் செய்த தமிழ்படம் மூலம் தயாரிப்பு துறையில் கால் பதித்தவர் ஒய்நாட் சசிகாந்த். தனது ஒய்நாட் ஸ்டூடியோ மூலம் வ குவார்டர் கட்டிங், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவியத் தலைவன், இறுதிசுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 ஆகிய படங்களை தயாரித்தார். தற்போது, விநியோகத் துறையிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
ஒய்நாட் எக்ஸ் என்ற விநியோக நிறுவனத்தை துவங்கி இருக்கும் அவர், முதல் படமாக விஜய்சேதுபதி நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தை வாங்கி வெளியிடுகிறார். இதனை தியாகராஜன் குமாரராஜ இயக்கி உள்ளார். பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு இதை இயக்குவதாலும், விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருப்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. படத்தை வாங்கி வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் ஒய்நாட் சசிகாந்த் கூறியதாவது:
ஒய்நாட் எக்ஸ் நிறுவனம், சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் திரைப்பட விநியோக உலகத்தில் தடம் பதிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய இடம்பெறும், மேலும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையையும் உருவாக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இப்படம் வர்த்தக ரீதியாக உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றார்.












