சூடானில் அரச படையினருக்கும் துணை இராணுவக் குழுவுக்கும் இடையிலான மோதல்களால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
எனினும், இது உயிரிழந்தவர்கள் அனைவரினதும் எண்ணிக்கை அல்ல என அச்சங்கம் தெரிவித்துள்ளது. நடமாடுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக பலர் வைத்தியசாலையை அடையாமல் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மோதல்களால் சுமார் 1,100 பேர் காயமடைந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சூடான் அரச படையினருக்கும் ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் முதல் மோதல்கள் நடைபெறுகின்றன. அதிகாரத்தை பொதுமக்களுக்கு கையளிப்பது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் கார்டூமின் பல்வேறு பகுதிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக இரு தரப்பினரும் உரிமை கோருகின்றனர்.