இலங்கைக்கான சுவிற்சர்லாந்தின் தூதுவரான சிரி வோல்ட் மற்றும் அவரது குழுவினர் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜை சந்தித்து சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் விவரித்த அமைச்சர், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்து அவற்றினை எதிர்கொள்வதற்கு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் விவரித்தார்.
இதன்போது பெண்களுக்கெதிரான வன்முறைகள், பெண்களின் அரசியல் பங்குபற்றுதல், சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் உரையாடப்பட்டன.
பெண்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவது எமது பிரதான இலக்குகளில் ஒன்றென்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், பெண் தொழில் முனைவோர்களை வலுப்படுத்துவதற்கான அமைச்சின் திட்டம் குறித்தும் உரையாடப்பட்டது.
அமைச்சர், பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில், குறிப்பாக பொதுப்போக்குவரத்து மற்றும் வீட்டு வன்முறைகள் தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவந்திருந்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆதரவுச்சேவைகளை வலுப்படுத்துவதற்கான தேவையினையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
பாதிக்கப்படுவோருக்கான ‘பாதுகாப்பு இல்லங்கள்’ நாடு முழுவதிலும் மிகவும் குறைந்தளவிலேயே இருப்பதையும், பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளை மதிக்கின்ற அதேவேளை அவர்கள் சுயமரியாதையுடன் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான ‘பாதுகாப்பு இல்லங்கள்’ பரவலாக உருவாக்கப்படவேண்டிய தேவையினையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவர், மாத்தறையில் உருவாக்கப்பட்டுள்ள ‘பாதுகாப்பு இல்லத்திற்கு’ மேலதிகமாக, வடமாகாணத்திலும், காலப்போக்கில் கிழக்கு மாகாணத்திலும் ‘பாதுகாப்பு இல்லங்களை’ அமைப்பதற்கான முன்மொழிவினை மேற்கொண்டதுடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களை ஏற்பாடுசெய்வதன்மூலம் வளர்ந்துவரும் பெண் அரசியல்வாதிகளை ஊக்குவிப்பதற்கும் தமது விருப்பினைத் தெரிவித்திருந்தார்.



