புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான விசாரணைகளுக்காக யாழ். ஊடகவியலாளர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கொழும்பு – 1இல் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குறித்த ஊடகவியலாளரை சமூகமளிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அலுவலகச் செய்தியாளர் ஒருவரே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க உதவியதாக சந்தேகிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப் பெற்றுள்ளன.
குறித்த வழக்குத் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்காக அறிக்கை சட்டமா அதிபரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது யாழ். ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

