ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, ஆகிய மூன்று அணிகளுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக 3 டெஸ்ட் தொடர்கள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் இனிவரும் டெஸ்ட் தொடர்கள் சுவாரஷ்யமிக்கதாக அமையவுள்ளன.
இந்நிலையில், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் அவுஸ்திரேலியா 75.56 % எனும் வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தையும், இந்தியா 58.93 % எனும் வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், இலங்கை 53.33 % எனும் வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.
48.72 எனும் வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ள தென் ஆபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கான வாய்ப்பு மிகவும் சொற்பமாகும். அதாவது, இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடரும், இலங்கை – நியூஸிலாந்து அணிக்கெதிரான தொடரும் நடத்தப்படாது போகும் பட்சத்திலேயே அதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆகவே, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு தங்களது வெற்றி, தோல்விகளுடன் ஏனைய இரண்டு அணிகளினதும் முடிவுகளைக் கொண்டுள்ளமை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கு மேலும் சுவாரஷ்யத்தைக் கூட்டியுள்ளது. இவை குறித்து சிறிய ஒவ்வொரு அவதானத்தை செலுத்துவோம்.
இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி?
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அவுஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம், 75.56 வெற்றி வீதத்தை பெற்று இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
எனினும், இந்தியாவில் நடைபெறவுள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலியா 4 க்கு 0 என்ற கணக்கில் தோல்வியடைந்து, நியூஸிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் தோல்வியடைந்தால் மாத்திரமே, அவுஸ்திரேலியா இறுதிப் பேட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழக்கும்.
இந்தியாவுக்கான வாய்ப்பு எவ்வாறு அமையும்?
மறுமுனையில் இந்தியா தனது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4க்கு 0 அல்லது 3 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது உறுதி.
அதாவது, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 4-0 என வென்றால் 68.06% சதவீதமாகவும், 3-1 கணக்கில் வென்றால் 62.5% சதவீதமாகவும், தொடர் 2-2 என முடிவடைந்தால் 56.94% சதவீதமாகவும் அமையும்.
மாறாக, இந்தியா 4க்கு0 அல்லது 3க்கு 1 என்ற கணக்கில் தோல்வியடைந்தால், இலங்கை- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரின் முடிவைப் பொறுத்தே இந்தியாவின் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
அப்படியாயின், இலங்கை அணியை 2க்கு 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வெல்ல வேண்டும்.
இந்தியாவில் 4-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்தால் அவுஸ்திரேலியாவின் சதவீதம் 59.65 ஆகவும், நியூஸிலாந்துடனான தொடரை இலங்கை கைப்பற்றினால், இலங்கை 61.11 சதவீதத்தை பெறும். நியூஸிலாந்து அணிக்கெதிரான தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை வென்றால், 55.56 சதவீதமாகவே உயரும், இது இந்தியாவுடனான தொடரில் அவுஸ்திரேலியா 4க்கு 0 என்ற கணக்கில் தோற்பதைப் காட்டிலும் குறைவாக இருக்கும்.
ஆகவே, ஏனைய அணிகளின் முடிவுகளைச் சார்ந்திருக்காமல் இருக்க ஆஸ்திரேலியா செய்ய வேண்டியது, குறைந்தபட்சம் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியையாவது வெற்றி தோல்வின்றி முடிப்பதுதான். அவ்வாறு போட்டித் தொடர் முடியும்பட்சத்தில், அவர்கள் 61.40% சதவீதத்தை பெறுவார்கள். இது, இலங்கை அடையக்கூடிய 60.96% சதவீதத்தை விடவும் சற்று அதிகமாகும்.
இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெறுவது எப்படி?
ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ள இலங்கைக்கு முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இதன்படி, அவுஸ்திரேலிய அணி இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 4க்கு 0 அல்லது 3 க்கு1 என வெல்ல வேண்டும். அல்லது இந்திய அணி 4க்கு 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். இவை இரண்டில் ஏதேனும் ஒன்று நடைபெற்றால், இலங்கை அணி இறுதிப் போட்டி நுழைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இதேவேளை, இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை 2 க்கு 2 என சமநிலையிலோ அல்லது அதனை விட மோசமான முடிவில் போட்டியை முடித்துக்கொள்ள வேண்டும். இந்திய அணி டெஸ்ட் தொடரை 2க்கு 2 என சமநிலை முடிக்கும்போது, இலங்கை அணி தமக்கு எஞ்சியிருக்கும் நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றினால் 61.11 எனும் வெற்றி சதவீதத்துடன் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற முடியும்.
நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர்கள்
இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவிலும், தென் ஆபிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடர் தென் ஆபிரிக்காவிலும், இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நியூஸிலாந்திலும் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன.