தற்போது கனேடிய தேசத்தில் பேசுபொருளாகியுள்ள அரசியல் விடயத்தில் நாம் தெளிவோடும் இன நலன் சார்ந்த அறிவோடும் எமது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
ஒரு மக்கள் சபையில், ஒரு பிரதிநிதிமீது எழுப்பப்படும் நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய வகையில் பதில் அளிப்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பாகும்.
இது உலகில் உள்ள எவருக்கும் பொருந்தும். இதை நாம் தடுத்தால் அல்லது தவறாகப் புரிந்தால் ஶ்ரீலங்காவின் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள்மீது பன்னாட்டு நடவடிக்கையை கோர முடியாத ஒரு நிலை ஏற்படும்.
எனவே சுய நல அரசியலுக்கான அரசியலை இன அரசியலாக பார்க்க தேவையில்லை. இயலாமைகள் வெளிப்படுகின்ற போது இனம்சார்ந்த வெறி என அதனை மடைமாற்ற முற்படுவது இனத்திற்கு செய்கின்ற துரோகமாகும்.
அத்துடன் அத்தகைய அரசியல் எமக்கு பெரும் பின்னடைவுகளையே தரும். எனவே கனேடிய தேசத்தில் தமிழ் இன உணர்வு சார்ந்த அரசியலை சுயநலத்திற்காக எவரும் பயன்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.
ஏனென்றால் தாய்நிலத்தில் பல மாவீரத் தெய்வங்களை புதை குழியில் விதைத்து எங்கள் மக்களின் விடுதலைக்காக காத்திருக்கிறோம். அதுபோல இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் நீதிக்காக நாம் பயணிக்க வேண்டும்.
பன்னாட்டு அரசியலை அறிவோடும் தெளிவோடும் இன நலன் சார்ந்தும் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதனை நிதானத்துடன் உணர்ந்து அனைவரும் நடப்போம் என்பதை அன்புரிமையுடன் வலியுறுத்துகிறேன்.