அரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்.) சேவை மீது தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு 24 மணி நேரத்துக்குள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ. ரி. என். தொலைக்காட்சியில் எந்தவொரு நேரடி அரசியல் நிகழ்ச்சியையும் ஒளிபரப்பு செய்வதை தடைசெய்து தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை அந்த நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக பலத்த கண்டனம் எழுந்ததை அடுத்தே நேற்றுக் காலை தடை உத்தரவை அவர் மீண்டும் விலக்கிக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்றைய தினம் ஐ. ரி. என். நிறுவன உயர்மட்டத்துக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்தே அந்த நிறுவனத்தின் மீதான தடையை நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலக உயரதிகாரியொருவர் கூறியுள்ளார்.

