குப்பைப் பிரச்சினையில் எவரும் சுயநலத்துடன் செயற்படக் கூடாது. இப் பிரச்சினையை தீர்க்க அனைவரும் எம்மோடு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்லையில் குப்பை மேடு சரிந்ததில் 33 பேர் பலியாகினர். இதனை ஒரு பாடமாக கொண்டு இப்பிரச்சினையை தீர்க்க ஒத்துழைப்பு வழங்குவது நாட்டு மக்களின் கடமையாகும் என்றார். அழுத்கம பஸ் தரிப்பிட இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்: அழுத்கமை நகரம் தென்னிலங்கையில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகும். உல்லாசப் பயணத்துறையுடன் தொடர்புடைய இந்த நகரை அழகாக அபிவிருத்தி செய்ய வேண்டும்.
பேருவளை நகரில் தான் உலகின் முதலாவது வர்த்தக முதலீட்டு வலயம் இருந்துள்ளதை வரலாற்றின் மூலம் நாம் அறிவோம்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களில் பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு சிறந்த போக்குவருத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் இந்த பஸ் தரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.