Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் ” இறைமை மற்றும் சமஷ்டி” தொடர்பாக தெரிவித்த சில கருத்துக்கள்

December 28, 2017
in News, Politics
0
சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார்  ஆகியோர் ” இறைமை மற்றும் சமஷ்டி” தொடர்பாக தெரிவித்த சில கருத்துக்கள்

கஜேந்திரகுமார் : இறைமை பகிரப்பட வேண்டும். தமிழ்த்தேசத்திற்கு இறைமை உண்டு. அந்த தமிழ்த் தேசத்தை பிடித்து வைத்துக்கொண்டு ஆட்சி செய்கின்றார்கள். பிராந்தியத்திற்கு இறைமை இருந்தால் மாத்திரமே அது சமஷ்டி. இல்லையெனில் அது ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப்பகிர்வே.

கஜேந்திரகுமார் ” சமஷ்டி” தொடர்பான குழப்பத்தில் இருக்கின்றாரா? அல்லது த தே கூட்டமைப்பைப் பிழைகாண வேண்டுமென்றே இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்கின்றாரா? என்று தெரியவில்லை.

ஒவ்வொன்றாக வருவோம்.

இறைமை என்பது சுருக்கமாக, ” கேள்விக்குட்படுத்த முடியாத, கட்டுப்படுத்த முடியாத, எல்லைகளற்ற அதிகாரம்;” என்பது பொருளாகும். அன்று ” மன்னன்” சொன்னதெல்லாம் சட்டமானது. யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. அதைத்தான் சுமந்திரன் சுருக்கமாக கூறினார். இன்று அந்த இறைமை மக்களிடம் இருக்கின்றது. அதே நேரம் ஐ நா சாசனம் ‘நாட்டின்’ இறைமையைத்தான் குறிப்பிடுகின்றது. ( state sovereignty)

நாட்டின் இறைமை மக்களிடம் இருப்பதாக ஜனநாயக நாடுகளில் கருதப்படுகிறது. இலங்கைபோன்ற சில நாடுகளில் அது அரசியலமைப்பிலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சமஷ்டியில் மாநிலங்களுக்கு இறைமை உண்டா?
———————————————-
அரசியலமைப்பு சட்டநிபுணர்கள் சிலர் சமஷ்டி ஆட்சியில் மாநிலங்களுக்கு ” இறைமை” ( sovereignty) இருப்பதாகவும் சிலர் ” மீயுயர் தன்மை( supremacy) இருப்பதாகவும் கூறுகின்றனர். 13 வது திருத்த சட்டமூலத் தீர்ப்பில் இலங்கை உயர்நீதிமன்றம் சமஷ்டியில் மாநிலங்களுக்கு ‘உப இறைமை’ ( subsidiary sovereignty) இருப்பதாக குறிப்பிடுகின்றது.

சமஷ்டியில் மாநில இறைமை, என்பது வழங்கப்பட்ட அதிகார எல்லைக்குட்பட்பட்ட விடயங்களில் வெளிச்சக்தி எந்த தலையீடும் செய்ய முடியாது; என்பது பொருள்.

சமஷ்டியில் மாநிலங்களின் மீயுயர்தன்மை என்பது, வழங்கப்பட்ட அதிகாரங்களில் மத்தி தலையிட முடியாது, ஆனாலும் இறைமை கிடையாது. ஆனாலும் அரசாங்கத்திற்கும் மேலுள்ள இறைமையைக் கொண்ட அந்த சக்தியால் முடியும். இலங்கையில் அந்த இறைமை மக்களிடம் இருக்கின்றது. அதனால்தான் உயர்நீதிமன்றம் ‘ உப இறைமை’ என்ற பதத்தை பாவித்திருக்கின்றது. அதாவது மாநிலங்கள் உப இறைமையைக் கொண்டிருக்கும். மக்களிடம் முழுமையான இறைமை இருக்கும்.

சுருங்கக் கூறின், இடைக்கால அறிக்கையைப் பொறுத்தவரை அது தெட்டத்தெளிவான சமஷ்டி. அது மாநிலங்களுக்கு மீயுயர் தன்மையை வழங்குகின்றது. ஆனால் இறைமை வழங்கவில்லை.

அதாவது பாராளுமன்றத்தினால் மாகாணங்களின் அதிகாரத்தைப் பறிக்கவோ, அதில் கைவைக்கவோ முடியாது. ஆனால் சர்வஜன வாக்கெடுப்பினூடாக அதனைச் செய்ய முடியும். சுமந்திரனின் கூற்றுப்படி ‘ மறைத்துவைத்திருக்கின்ற சரத்து அதையும் தடுக்குமா? என்பது தெரியவில்லை.

எது எவ்வாறான போதிலும் நடைமுறையில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாகாணசபை விடயங்களில் தலையிடுவது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அரசியல் கேள்வியாகும். அது சாத்தியம் என்று நினைப்பவர்கள் ‘ தலையிடலாம்’ என்ற முடிவுக்கும் அது சாத்தியமில்லை என நினைப்பவர்கள் ‘ தலையிட முடியாது’ என்ற முடிவுக்கும் வரலாம். எவ்வாறாயினும் அது அவ்வளவு இலகுவாக சாத்தியப்படாது என்ற முடிவுக்கு எல்லோரும் வரலாம்.

இப்பொழுது கஜேந்திரன் கூறுகின்ற இறைமைக்கு வருவோம். அவர், ஏற்கனவே தமிழ்த் தேசம் இறைமையுடையதாக இருந்ததாகவும் அந்த இறைமையை தாரைவார்க்காமல் சில பொதுத்தேவைகளுக்காக ஒரு அரசாங்கத்தின் கீழ் சில விட்டுக்கொடுப்புகளுடன் ஒன்றுபடுவதைக் குறிப்பிடுகின்றார். இது சமஷ்டிக்குரிய தன்மை அல்ல. அதற்கு மேலும் ஒரு படி சென்று confederation இனினுடைய தன்மையாகும். இங்கு மொத்த நாட்டுக்கும் ‘ இறைமை’ என்பதே கிடையாது. இறைமை எல்லாம் மாநிலங்களுக்கே. அவை விரும்பிய நேரத்தில் பிரிந்து செல்லலாம். இன்று உலகில் எங்குமே confederation கிடையாது; சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தை அல்லது UAE ஐ அவ்வாறு குறிப்பிட்டபோதும்.

அவ்வாறு இருந்த confederation எல்லாம் இன்று பெரும்பாலும் சமஷ்டி நாடுகளாகிவிட்டன. அதற்கு அமெரிக்கா ஒரு சிறந்த உதாரணம். அவ்வாறு சமஷ்டி நாடாக மாறுகின்றபோது அந்த மொத்த நாட்டிற்கும் இறைமை வருகின்றது. இங்கு இறைமை மத்திக்கும் மாநிலங்களுக்குமிடையில் பங்கிடப்படுகின்றது. இவ்வாறான சமஷ்டி ” integrative federalism ” என்படுகின்றது. இவ்வாறான சமஷ்டியிலும் பெரும்பாலும் மாநிலங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை இருக்கும்; அரசியலமைப்புச் சட்டத்தால் அது பலமாக தடைசெய்யப்பட்டாலேயொழிய. அவ்வாறு தடைசெய்யப்பட்டாலும் அங்கு சுயநிர்ணய உரிமை குறுக்கிடும். யூகோஸ்லாவியா இதற்கு ஓர் சிறந்த உதாரணமாகும்.

ஆரம்பகாலங்களில் பெரும்பாலான சமஷ்டிகள் இவ்வாறு ” integrative federalism” ஆகத்தான் இருந்தது. அதனால்தான் இன்றும் ‘சமஷ்டி’ என்ற சொல்லைக் கேட்டதும் சிலர் ‘ பிரிவினை’ என்கிறார்கள். ஆனால் இன்று உலகில் devolutionary Federalism ( அதாவது பல நாடுகளாக இருந்து ஒரு நாடாகாமல் ஒரு நாடாக இருந்து பல மானிலங்களாதல், இங்கு முழுமையான இறைமை பங்கிடப்படுதல் கட்டாயமாக எதிர்பார்க்க முடியாது), quasi- Federalism ( அதாவது முழுமையான சமஷ்டிக்கு குறைவான சமஷ்டி; இதில் பல படித்தரங்கள் உண்டு. இந்தியாவிலும் இந்தவிதமான சமஷ்டிதான் இருக்கின்றது) போன்றவை இருக்கின்றன.

இடைக்கால அறிக்கை முழுமையான சமஷ்டியை பிரேரித்திருக்கின்றது. அது, integrative அல்ல, மாறாக devolutionary federalism ஆகும்.

எனவே, கஜேந்திரன் confederation ஐ எதிர்பார்க்கின்றாரா? அல்லது integrative federalism ஐ எதிர்பார்க்கின்றாரா? இரண்டுக்குமே இலங்கை ஒன்றுக்குமேற்பட்ட நாடுகளாக இருந்து ஒன்று சேர்ந்தவை; பிரிந்து செல்கின்ற உரிமை கொண்டவை என்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது நடைமுறைச் சாத்தியமா?
இதனைவிட பிரிவினையை வெளிப்படையாக கோரலாமே!

Previous Post

தனுஷ் யாருடைய மகன் என ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும்

Next Post

ஜெருசலேத்தில் ‘டிரம்ப்’ பெயரில் புதிய ரயில் நிலையம்

Next Post

ஜெருசலேத்தில் ‘டிரம்ப்’ பெயரில் புதிய ரயில் நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures