சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் – 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படைப்பு என வழங்கப்பட்டிருப்பதால்.. திரையுலக வணிக வட்டாரத்தில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள ரசிகர்கள் பட மாளிகைக்குச் சென்று கண்டு ரசிப்பது வழக்கம்.
ஆனால் தற்போது எதிர்வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘கூலி ‘ திரைப்படத்திற்கு 18 வயதிற்கு மேற்பட்ட ரசிகர்கள் மட்டுமே இப்படத்தை காண இயலும் வகையில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த படத் தயாரிப்பு நிறுவனம்- படத்திற்கு 13 வயதிற்கு மேற்பட்டவர்களும் பார்க்கக்கூடிய வகையிலான யு / ஏ ( U/A ) சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் ‘கூலி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரையுலகினர் பேசுகையில், ” இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக பொறுப்புணர்வு இல்லாமல் கஞ்சா – போதை – துப்பாக்கி- போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்ற போர்வையில் படம் முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
இதை பார்வையிட்ட தணிக்கை குழு படக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. ஆனால் இயக்குநர் தரப்பு … ரத்தம் தெறிக்கும் காட்சிகளை நீக்க முடியாது என உறுதி பட தெரிவித்து விட்டதால்.. தணிக்கை குழு வேறு வழி இல்லாமல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் தணிக்கை சான்றிதழை வழங்கியது.
இதனால் அதிருப்தி அடைந்த படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் இயக்குநர் லோகேஷ் கனகராஜை வரவழைத்து தணிக்கை குழு அறிவுறுத்திய விடயங்களை படத்தில் மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த இயக்குநர் தரப்பு. தணிக்கை குழுவினர் குறிப்பிட்ட காட்சிகளில் ரத்தத்தை கிறாபிக்ஸ் காட்சிகள் மூலம் மறைக்கவும்.. தெளிவில்லாமல் காட்சிப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. அதனால் இப்படத்திற்கு மீண்டும் மறு தணிக்கைக்கு விண்ணப்பித்து யூ ஏ சான்றிதழை படக்குழுவினர் பெறக்கூடும் ”என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘ராஜா சின்ன ரோஜா’ ஆகிய படங்களின் மூலம் ஏராளமான குழந்தை ரசிகர்களை கவர்ந்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1989 ஆம் ஆண்டில் வெளியான ‘சிவா ‘எனும் திரைப்படம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டிய படைப்பு என்ற தணிக்கை சான்றிதழை பெற்றது என்பதும், அதற்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’, ‘விடுதலை’, ‘நான் சிவப்பு மனிதன்’ ஆகிய படங்கள் அதுபோன்ற சான்றிதழை பெற்றிருந்தது என்பதும் , நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ‘கூலி’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தொடர்பான வணிக நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் திரையுலகினர் சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.