சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – பொலிவுட் நடிகர் அமீர்கான் – சத்யராஜ் – நாகார்ஜுனா – உபேந்திரா- சௌபின் சாகிர் – சுருதிஹாசன்- ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள் வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகினர் மற்றும் ஏனைய இந்திய திரையுலகினர் அனைவரும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதீதமாக வளர்த்துக் கொண்டுள்ளனர். படத்தை விளம்பரப் படுத்தி வரும் பட குழுவினரும்.. படத்தைப் பற்றிய விடயங்களை மிகுந்த கவனத்துடனும் , எச்சரிக்கையுடனும் கையாண்டு பகிர்ந்து வருகிறார்கள். படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் சமூக வலைதள பக்கத்தில் உருவாகி விடக்கூடாது என கவனத்துடன் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக ‘கூலி’ வெளியாகிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் முதல் நாளன்றே இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வசூலை எளிதாக கடக்கும் என்று திரையுலக யூக பேர வணிகர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள்.