தமிழ் திரையுலகின் சுப்பர் ஸ்டார் யார்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் இடையே பெரும் சர்ச்சையும், விவாதமும் எழுந்து வரும் நிலையில், ரசிகர்களின் நிரந்தர சுப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தின் திரையுலக பாதையை, வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனும் பின்பற்றி பயணிக்கிறார் என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டாக்டர்’, ‘டான்’. இந்த இரண்டு திரைப்படங்களும் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெற்று, இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் :பிரின்ஸ்’. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நேரடியாக தயாராகி வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த விநியோகஸ்தர்கள், தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்குமாறு பட தயாரிப்பு நிறுவனத்திடமும், நாயகன் சிவகார்த்திகேயனிடமும் முறையிட்டனர்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் சிவகார்த்திகேயனும், தயாரிப்பு நிறுவனமும் 50 சதவீத அளவிற்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டு, இந்திய மதிப்பில் மூன்று கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கினர்.
இந்த தொகையை சிவகார்த்திகேயன் விநியோகஸ்தருக்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயனின் இந்த போக்கினை வரவேற்ற திரையுலக வணிகர்கள், சுப்பர் ஸ்டாருக்கு பின் அவரது பாணியை சிவ கார்த்திகேயன் பின்பற்றுவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘மாவீரன்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கு பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.