தெற்காசியாவில் 2,27,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற 2004 சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
2004 டிசம்பர் 26 இந்த துரதிர்ஷ்டவசமான நாளில் 9.1 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட 100 அடி உயர அலை, தாய்லாந்து, இலங்கை, இந்தியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளைத் தாக்கியது.
இந்தோனேசியாவின் சுமத்ராவுக்கு அருகில் அதன் மையப்பகுதியுடன் கூடிய இந்த சுனாமி, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அழிவுகரமான ஆழி அலைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுனாமி அலைக்கு பின்னர் பாதிப்புக்குள்ளான பல நாடுகளின் பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டன.
இந் நிலையில் 2004 சுனாமி அலையின் 17 ஆவது ஆண்டினை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதான நிகழ்வு காலி சுனாமி நினைவிடத்திற்கு அருகில் இடம்பெறவுளளது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல், அனர்த்தங்களின் போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அனர்த்தங்கள் பற்றி அடிக்கடி தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]