பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேகச் செயலாளராக மிக நீண்ட காலமாகப் பணியாற்றிவந்த சுதத் சந்திரசேகர திடீரெனப் பதவி விலகியுள்ளார்.
இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளராக 1985ஆம் ஆண்டு முதல் தற்போது வரையான காலப்பகுதிவரை பணியாற்றிய நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு விளக்கக்கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள அவர், அதில் பிரதமரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தனக்கு நம்பிக்கையீனத்தினை ஏற்படுத்துகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்தும் அவருடன் பணியாற்ற விரும்பவில்லை எனவும், அவர் பல அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் எனத் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மிக நீண்ட காலமாகப் பிரதமரின் பிரத்தியேகச் செயலாளராக பணியாற்றிய சுதத் சந்திரசேகர திடீரெனப் பதவி விலகியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மேலும் பலரும் தமது அதிருப்திகளை வெளியிட்டு வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.