சிவில் உடையில் வருகைதந்து தமிழ்மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்வதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் நேற்று காலை தம்பனைசோலையில்
நடைபெற்ற முன்பள்ளி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் ஒதியமலையில் படுகொலை செய்யபட்டவர்களிற்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே இருந்த மக்களால் ஒரு குற்றசாட்டு முன்வைக்கபட்டது. சிவில் உடையில் திரியும் இனம்தெரியாத சில நபர்கள் இரவு நேரங்களில் வயல் காவலுக்கு செல்லும் போது எம்மை வழிமறித்து நீண்டநேரம் இருத்தி வைக்கிறார்கள். சிலவேளைகளில் அதிகாலை 2 மணிவரைக்கும் இருத்தி வைக்கிறார்கள். இதனால் தாங்கள் பயிரிடப்பட்டவை யானைகள் அழித்துவிட்டதாகவும் இதனை யார் தட்டி கேட்பதெனவும் தெரிவித்தார்கள். அந்தநேரத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரி இருந்தமையால் அவரது கவனத்திற்கு நாங்கள் குறித்த விடயத்தை கொண்டு சென்றிருந்தோம்.
எனினும் இந்த ஒன்றரை மாதத்திற்கு பிற்பாடு பழைய குருடி கதவை திறவடி என்பது போல சிவில் உடையில் வருகைதந்து தமிழ்மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் பல நடைபெற்றுவருகின்றன. இது ஒரு ஆபத்தான விடயம் எனவே அனைத்து தமிழ்கட்சிகளும், அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற தமிழ்கட்சிகளும் இவ் விடயத்தை கருத்தில் எடுத்து ஐனாதிபதி, பிரதமருக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
தற்போது விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பற்றி கூறிய கருத்தானது புனர்வாழ்வு பெற்ற 12ஆயிரம் போராளிகளின் எதிர்காலத்தை சூனியமாக்கும் செயற்பாடு என்றே நான் பார்கிறேன். எனவே போராளிகளை பலிகடாவாக மாற்றுவதை நாம் ஏற்கமுடியாது.
அத்துடன் நாட்டை குட்டி சுவராக்கியது தமிழ் இளைஞர்களே என்று பெரும்பான்மையினத்தை சேர்ந்தோர் கூறுகிறார்கள். உண்மையில் எம்மீது திணிக்கபட்ட அரச பயங்கர வாதத்திற்கு எதிராகவே எமது இளைஞர்கள் போராடினார்கள் என்பதை அவர்களிற்கு கூறிக்கொள்கின்றேன் என்பதாக மேலும் கூறினார்.