சிறுபான்மையின மக்கள் இம்முறை தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிப்பார்கள் என்பதை உணர்ந்துகொண்ட சிலர், அந்த வாக்கு வங்கியை உடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஓரங்கமாக சஜித்துக்கு கிடைக்கவுள்ள கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் நோக்கில் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதுடன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் அவருக்கே வாக்களிப்பார்கள் என்பதையும் பலர் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே அந்த வெற்றியைக் குழப்பி, சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கக்கூடிய சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் சிதரடிக்கப்பட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அதன் ஓரங்கமாகவே கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்த எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்த நாட்டில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாவது சாத்தியமற்றது என்று நன்கு தெரிந்திருந்தும்கூட அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் அதற்குக் காரணம், கிழக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கக்கூடிய முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதரடிக்கும் நோக்கமேயாகும்.
உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பெரும் சிக்கலை எதிர்கொண்டபோது, அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளைத் துறந்து அவர்களுக்கு ஆதரவாக நின்றார்கள். அவ்வாறிருக்கையில் இப்போது முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் சிதரடிக்கும் குறுகிய நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடு வரவேற்கத்தக்கதல்ல. எனினும் இன்றளவில் முஸ்லிம் மக்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆகவே ஹிஸ்புல்லாஹ்வுக்கு பெருமளவில் வாக்களிக்கமாட்டார்கள்.

