விஜேதாச ராஜபக்ஸ எம்.பி. முன்வைத்துள்ள அரசியலமைப்புத் திருத்த மசோதாவின் ஊடாக தேசிய ரீதியிலுள்ள சிறிய கட்சிகளின் உறுப்பினர்களுக்கும், சிறுபான்மையின பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்றம் செல்ல முடியாமல் போவதாகவும், இந்த தீர்மானத்தை ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லையெனவும் முக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை நகரில் இன்று (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவர்களிடம் காணப்படுகின்றது. இவர்களின் கருத்துக்கள் எப்போதும், சிறிய கட்சிகளுடன் இணைய முடியாது என்பதாகவே உள்ளது.
சிறுபான்மைக் கட்சிகளையும், சிறுபான்மையினரையும் புறக்கணித்து அரசியல் கட்சி செய்யப் போனால், விரைவில் அவர்கள் கஸ்டத்தில் வீழ்ந்து விடுவார்கள்.
விஜேதாச ராஜபக்ஸ என்பவர் கட்சியை மாற்றிக் கொண்டு தாவித் திரியும் ஒருவர் ஆவார். அவர் கூறும் விடயங்களை இந்த நாட்டு மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. ஒரு கட்சியில் இருக்கும் போது ஒன்றையும், கட்சி தாவியதும் இன்னொன்றையும் கூறும் ஒருவர் தான் இவர். கொள்கையொன்று இல்லாத இவர்கள் போன்றவர்கள் கூறும் கருத்தை நாமும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனவம் அவர் மேலும் கூறியுள்ளார்.

