வைரமுத்து – சின்மயி பெயர்கள் சமூகவலைதளங்களையே அதிரவைத்துக்கொண்டிருக்கிறது.
பாலியல் ரீதியான தொல்லையை அனுபவித்த பெண்கள் ட்விட்டரில் “மீ டூ” என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிர்ந்துவருகிறார்கள்.
இது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. “இது நல்லதுதான். இனி பெண்களைப் போகப்பொருளாக நினைத்து ஆண்கள் சீண்டத் தயங்குவார்கள்” என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
இந்த விசயத்தில் வைரமுத்து பெயரும் அடிபட.. பலருக்கும் அதிர்ச்சி.
பிரபல பாடகி சின்மயி, அக்டோபர் 9ஆம் தேதியன்று வெளியிட்ட ட்விட்டர்பதிவில்,“ 2005-2006ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. இலங்கைத் தமிழர்களுக்காக ‘வீழமாட்டோம்’ என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்தோம். இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்தது. , இந்த விழாவில் நானும் கலந்துகொண்டு பாடினேன்.
விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில்,என்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் என்று கூறிய விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று நான் சந்திக்க வேண்டும் என்று கூறினார்.
எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி கூறிய அவர், இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டினார். . ஆனால், நான் உறுதியாக நின்று, உடனடியாக எங்களை இந்தியாவுக்கு அனுப்பும்படி வலியுறுத்தினேன். அதன் படி வந்தேன்” என்று சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதை சின்மயியின் தாயார் பத்மாசினியும் ஆமோதித்திருக்கிறார்.
இதற்கு வைரமுத்து, “பிரபலமானவர்கள் மீது அவதூறை வீசுவது வழக்கமாகிவிட்டது. காலம் பதில் சொல்லும்” என்று பதில் அளித்திருக்கிறார்.
இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சின்மயி, வைரமுத்துவை, “பொய்யர்” என்று விமர்சித்திருக்கிறார்.
இந்த நிலையில் சின்மயியை தொடர்புகொள்ள முயன்றோம். அவரது தாயார் பத்மாசினியிடம் பேச முடிந்தது.
அவரிடம், “வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார். நீங்களும் சம்பவம் உண்மை என ஆமோதித்திருக்கிறீர்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் என்கிறீர்கள். ஏன் இத்தனை தாமதமான புகார்? ஆதாரம் உள்ளதா? இந்த நிலையில் வைரமுத்துவின் எழுதிய பாடல்களை சின்மயி பாடினார். வைரமுத்து பத்மபூஷன் விருது பெற்றபோது பாராட்டினார். இதெல்லாம் எப்படி நடந்தது? குறிப்பாக சின்மயி திருமணத்துக்கு வைரமுத்துவை அழைத்தீர்கள். அவரிடம் சின்மயி ஆசீர்வாதம் பெற்றாரே… என்றெல்லாம் வைரமுத்துவின் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்களே..” என்று கேட்டோம்.
சின்மயி திருமணத்தில் வைரமுத்து..
அதற்கு சின்மயி தாயார் பத்மாசினி அளித்த பதில்:
“சுவிஸ் சம்பவம் நடந்தது சுமார் பதினான்கு வருடங்களுக்கு முன்பு. அப்போது நான் நினைச்சதை சாதிச்சுட்டு என் பெண்ணை பத்திரிமா கூப்பிட்டு வந்தேனா இல்லாயா? யார் என்ன மிரட்டினாலும் பயப்படலையே.. இதுக்கு மேல என்னை மிரட்டினா உன்னை டிபால்ட் பண்ணிருவேன்.. இதுக்கு மேல பேசினா இந்தியன் ஹை கமிசன் போவேன்.. நீ யாருக்கா பேசறியோ அவரும் சேர்ந்து அரஸ்ட் ஆக வேண்டியிருக்கும்னு பேசினேன்.
ஓங்காரமா பேசாம குரல் உயர்த்தாம ஊருக்கு வந்துட்டோம்.
அவ்வளவுதான்.
நான் அந்தக்காலத்து மனுசி. மனிதர்கள் பலவிதமா இருப்பாங்க. நாம சரியா நடந்துக்கணும். அதோட எல்லாரும் வேணும்னு நினைக்கிறவள். அதனால் அந்த வெளிநாட்டு விவகாரத்தை அப்போ பேசலை.
வைரமுத்துவிடம் சின்மயி தம்பதி ஆசீர்வாதம்
சில நாட்களுக்கு முன்பு, ட்விட்டர்ல மீ டூ என்று ஹேஷ்டேக் பிரபலமானது. பெண்களுக்கு நடந்த துன்புறுத்தல்களை பகிர்ந்துகொண்டார்கள். அந்த வகையில் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சோகத்தை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தாள்.
உடனே அவளுக்கு கடுமையான மிரட்டல்கள் வந்தன. அதனால் ஆவேசப்பட்டு சுவிஸ் சம்பவம் குறித்தும் எழுதிவிட்டாள்.
இதற்கு ஆதாரம் கேட்பது முட்டாள்த்தனம். ஏனென்றால் இது போன்ற சம்பவங்களில் ஆதாரங்களை சேகரிக்கும் சூழலோ அதற்கான சந்தர்ப்பமோ பெரும்பாலான பெண்களுக்கு வாய்க்காது. அதாவது இப்படி ஒரு பேச்சைக் கேட்கும்போது அதிர்ச்சி அடையத்தான் வேண்டியிருக்கும். அங்கிருந்து தப்பிச்செல்லத்தான் நினைப்பார்கள்.
தவிர இது அரசுக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ தொடர்புள்ள விசயம் அல்ல. இது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் அழுக்கு.
ஆம்.. இது போன்ற அத்துமீறல்கள் வைரமுத்துவோடு நிற்பதில்லை. உங்கள் வீடு எங்கள் வீடு ஊர் உலகம் எங்கும் பரவியிருக்கிறது.
பத்மாசினி
சமூகத்தில் இப்படி புரையோடிப்போயிருக்கும் அசிங்கத்தை அனைவரது மனத்தில் இருந்தும் எடுப்போம் என்று எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.
சின்மயி திருமணத்துக்கு வைரமுத்துவை நான்தான் கூப்பிட்டேன். சின்மயி அல்ல.
அவள் யாருடன் எல்லாம் இணைந்து பாடினாளோ… பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள்.. எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்தேன். அதுதானே முறை!
வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி நான் பெறாத மகன். அவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தேன். இந்த நிலையில் வைரமுத்துவை மட்டும் புறக்கணிக்க முடியுமா?” என்று சொல்லி நிறுத்திய பத்மாசினி, சற்று இடைவெளிவிட்டு மீண்டும் பேசத்தொடங்கினார்:
“எத்தனயோ வீட்ல தவறுகள் நடக்கின்றன. குடும்பத்திலேயே தாய்மாமா அக்கா புருசன், தாத்தா, சித்தப்பா இப்படி உறவு முறையில உள்ளவர்களே தவறாக நடந்துவிடுகிறார்கள். ஆனாலும் குடும்பத்தில் ஒரு விழா என்றால் அவர்களையும் அழைப்பதில்லையா?
அப்படித்தான் வைரமுத்துவை அழைத்தேன்.
நம்ம வீட்டுக்கு வந்த திருடனைக்கூட.. “வாடா கண்ணா. நன்னா சாப்பிடு”னு சொல்லி சாப்பாடு போட்டு அவன் மேல அன்பும் மரியாதையும் செலுத்தினோம்னா அவனும் திருந்திடுவான்.