ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியானது கூட்டணி அமைக்கும் போது புதிய சின்னத்தை ஏற்றுக் கொண்டால் பேச்சு வார்த்தை வெற்றியடையும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே எம்முடைய எதிர்பார்ப்பாகும். எனினும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரைப் போன்று சின்னமும் முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை மறுக்க முடியாது.
எனவேதான், பொதுச் சின்னம் ஒன்று தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அவர்களிடம் முன்வைத்திருக்கின்றோம்.
எமது கோரிக்கைக்கு அந்த கட்சி இணக்கம் தெரிவித்தால் வெகுவிரைவில் பரந்து பட்ட கூட்டணி தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுகக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தையில், கட்சியின் சின்னத்தை மாற்றிக் கொள்ள தீர்மானிக்குமாயின் தாம் அரசியல் தீர்மானம் எடுக்க நேரிடும் என அக்கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிப்புச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.