சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 10 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் அமைதியாகவும் கௌரவமாகவும் பண்டிகையைக் கொண்டாடத் தேவையான சூழலை உருவாக்குவதே இலங்கை பொலிஸாரின் பிரதான நோக்கமாகும். இதற்காக நாடுபூராகவும் உள்ள 608 பொலிஸ் நிலையங்கள் மற்றும் 48 பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் புலனாய்வுப் பிரிவினர், சீருடை மற்றும் சிவில் உடை தரித்த உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறுவோர் நகை, பணம் மற்றும் பெறுமதியான ஆவணங்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். கதவுகளைச் சரியாகப் பூட்டி, அயலவர்கள் அல்லது கிராமியக் குழுக்களுக்குத் தகவல் வழங்கிச் செல்லுங்கள். சமூக வலைத்தளங்களில் நீங்கள் இருக்கும் இடங்களை புகைப்படங்களுடன் உடனுக்குடன் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு கேருகிறேன். இதன் மூலம் தகவல்களைப் பெற்று உங்கள் வீட்டில் உள்ள பெறுமதியான பொருட்களை திருட கள்வர்களுக்கு சந்தரப்பமாக அமையலாம்.
அத்தோடு போக்குவரத்து கடமைகளுக்காக 10 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளனர். மதுபோதையிலும், அதிவேகத்துடனும் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட காரணிகளால் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் சம்பவிக்கின்றன. ஆகையால் வாகன சாரதி தமது பொறுப்பை உணர்ந்தும், தனது அன்பார்ந்தவர்களை ஆபத்தில் தள்ளாது அவதானத்துடன் வாகனம் செலுத்துவது அவசியம்.
மேலும், நீர்நிலைகளில் நீராடும் போது உயிர்காப்புப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பெறுவதுடன், அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மைற்றும் பழக்கமில்லாத இடங்களில் நீராடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பத் தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்படுவது அவசியம் என்றார்.

