புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பொறுப்பில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க இன்று (புதன்கிழமை) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து பலர் கட்சி தாவலில் ஈடுபட்டனர். அதில் வசந்த சேனாநாயக்கவும் ஒருவராவார்.
இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், மஹிந்தவிற்கு அத்தரவு தெரிவித்த வசந்த சேனாநாயக்க மீண்டும் ஐ.தே.க வுடன் இணைந்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த 14 ஆம் திகதி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்திருந்தார்.
இதன்போது, “பெரும்பான்மை இருக்கும் தரப்புடன் தான் இருப்பதாகவும், புதிய அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் பதவியை இராஜினாமா செய்வதாகவும்” அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெறுகின்ற அமைச்சரவை கூட்டத்தில் வசந்த சேனாநாயக்க கலந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

