சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவை இரு பிரிவுகளாகப் பிரிப்பதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மிகப் பெரிய நிலப்பரப்பையும், அதிக கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டது சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு. இதனால் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது கருமங்களை ஆற்றுவதற்காக சாவகச்சேரிக்கு நீண்ட தூரம் பயணித்து வரவேண்டியிருக்கின்றது.
அத்தோடு பெரும் பிரதேசம் என்பதால் செயலகமும் நிர்வாக ரீதியான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. இதையடுத்து சாவகச்சேரியை இரு பிரதேச செயலர் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்த தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலும் இந்தக் கோரிக்கை மாவட்டச் செயலர் ந.வேதநாயகனால் வலியுறுத்தப்பட்டது. அதனை தலைமை அமைச்சர் நிராகரித்தார். ஒரு பிரதேச செயலகம் அமைக்கப்படுவதற்கான நியதிகளின்படி சாவகச்சேரியைப் பிரிக்க முடியாது என்று அவர் கூறினார்.
இருப்பினும் கடந்த 27ஆம் திகதி கொழும்பில் தலைமை அமைச்சரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சாவகச்சேரி பிரிக்கப்படவேண்டியதன் அவசியத்தை அவரிடம் வலியுறுத்தினர்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் இது தொடர்பில் கேட்டறிந்த தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக சாவகச்சேரி பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்தார்.
அதற்கான முதல் நடவடிக்கையாக சாவகச்சேரியைப் பிரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க் கிழமை கூடும் அமைச்சரவையில் இதற்கான பத்திரம் முன்வைக்கப்படும். அங்கீகாரம் கிடைத்ததும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

