மோட்டார் போக்குவரத்துக்கான சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதல் என்பன வழங்கும் நடவடிக்கையை அரச வைத்தியசாலைகள் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடந்த வாரம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, அங்கு பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஆலோசனையின்படி இந்த மருத்துவ சான்றிதல் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக விண்ணப்பங்களை ஒப்படைத்த ஒருவருக்கு அதனைப் பெற்றுக் கொள்ளும் நேரம் குறித்து குறுந்தகவல் ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் உபாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

