நடிப்பில் தனித்துவமான திறனை வெளிப்படுத்தும் கலைஞரான ‘ஆடுகளம்’ கிஷோர்- துவி சக்கர வாகனத்தில் சாகசங்களை செய்து இணையத்தில் பிரபலமான நடிகர் ரி. ரி. எஃப் வாசன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘இந்தியன் பீனல் லா’ (IPL) எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் பீனல் லா’ ( IPL) எனும் திரைப்படத்தில் கிஷோர், ரி. ரி. எஃப் வாசன், அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய் ,போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராதா பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டைட்டிலும்.. டைட்டில் லுக்கும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள்.. குற்ற சம்பவத்தின் பின்னணி குறித்து சட்டபூர்வமாக ஆராய்வதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
															
