விம்பிள்டனில் சீமாட்டிகள் ஒற்றையர் பிரிவில் போன்று கனவான்கள் ஒற்றையர் பிரிவிலும் புதிய ஒருவர் சம்பியனாவாரா அல்லது நடப்பு சம்பயின் மீண்டும் சம்பியானாவாரா என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸும் சேர்பியாவின் நோவாக் ஜொகோவிச்சும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடவுள்ளனர்.
நடப்பு சம்பியன் ஜொகோவிச் 21ஆவது கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் இன்றைய இறுதிப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளார்.
அதேதேவேளை முதல் தடவையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் கிர்கியோஸ் விளையாடவுள்ளார்.
அரை இறுதிப் போட்டியில் விளையாட நடால் தகுதிபெற்ற றிலையில் வயிற்று தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றார்.
இதன் காரணமாக அவரை அரை இறுதியில் எதிர்த்தாடவிருந்த கிர்கியோசுக்கு போட்டியின்றி வெற்றி அளிக்கப்பட்டது.
ஜொகோவிச், கிர்கியோஸ் ஆகிய இருவரில் ஜொகோவிச் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான வீரராகத் தென்படுகின்றார்.
எனினும் இவர்கள் இருவரும் 2017இல் இரண்டு தடவைகள் மோதியபோது அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கிர்கியோஸ் வெற்றிபெற்றிருந்தார்.
எவ்வாறாயினும் 2017இல் விம்பிள்டனில் கால் இறுதியுடன் உபாதை காரணமாக வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து கடந்த மூன்று (2018, 2019, 2021) சந்தர்ப்பங்களிலும் ஜொகோவிச் சம்பியனானார்.
மேலும் ஜொகோவிச் 32ஆவது தடவையாகவும் கிர்கியோஸ் முதல் தடவையாகவும் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர்.
பயிற்றுநர் ஒருவர் இல்லாமலேயே டென்னிஸ் போட்டிகளில் விளையாடிவரும் கிர்கியோஸ், டென்னிஸ் அரங்கில் முப்பெரும் வீரர்களான ஜொகோவிச், நடால், பெடரர் ஆகியோருடன் தன்னை ஒப்பிட விரும்பவில்லை என்றார்.
அந்த மூவரை நெருங்கமுடியாது எனக் குறிப்பிட்ட கிர்கியோஸ், அவர்கள் டென்னிஸ் அரங்கில் மிகச் சிறந்த முன்மாதிரிகள் எனவும் கூறினார்.
எவ்வாறாயினும், ‘இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நிறைய இருக்கின்றது. அதேபோன்று பதற்றமும் கூடவே இருக்கின்றது. நான் எத்தனையோ தடவைகள் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், இதுதான் விம்பிள்டனிலும் கிராண்ட் ஸ்லாமிலும் எனது முதலாவது இறுதிப் போட்டி. எனவே உயரிய நிலையை அடைய முயற்சிப்பேன்’ என்றார் அவர்.
இதேவேளை, இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை சுவீகரித்துள்ள ஜொகோவிச், 21ஆவது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து இன்று விளையாடவுள்ளார்.