மெக்காவை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டுவோம் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட இந்தியரை சவுதி பொலிசார் கைது செய்துள்ளனர்.
தொழில் தேடிச் சென்றவர், சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.
நீண்ட நெடிய வழக்காக நடந்துவந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு கிடைத்து அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியா தம்மம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வரும் கர்நாடக மாநிலம் குந்தாப்பூரைச் சேர்ந்த ஹரிஷ் பங்கோரா என்ற நபர் இஸ்லாமியர்களின் புனித தலமாக இருந்துவரும் மெக்காவை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அதில், ஹிந்து அன்பர்களே அடுத்த ராமர் கோவில் மெக்காவில் தான். அதற்கு அனைவரும் தயாராகுங்கள். ஜெய்ஸ்ரீராம் மோடி நம்மோடு இருக்கிறார் என பதிவிட்டிருந்தார்.
அவரின் கருத்துக்கு பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சவுதி தம்மம் பகுதி பொலிசாருக்கு இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. அதைச் தொடர்ந்து ஹரிஸ் பங்கோராவை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அத்துடன் அவரது வேலையும் பறிக்கப்பட்டு அவரது ஒப்பந்தமும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

