முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்காகவே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது அவரது தந்தையார் எஸ்.டப்ளியூ. ஆர். டி. பண்டாரநாயக்கவுக்கு ஏற்படுத்தியுள்ள பாரிய அவமானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவார் என்பது பலரால் எதிர்ப்பார்க்கப்பட்ட விடயம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஒரே மேடையில் நிற்பது பொதுமக்களின் நீண்டநாள் எதிர்ப்பார்ப்பு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

