மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்த்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘கொம்பு சீவி’ எனும் படத்தின் புதிய தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும்’ கொம்பு சீவி ‘எனும் திரைப்படத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார், காளி வெங்கட் , கல்கி ராஜா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் த. செல்லையா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பின்னணி பேசும் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் 1990களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதால்.. குறிப்பிட்ட இன மக்களின் வீர தீர செயலை போற்றும் வகையில் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான ‘படை தலைவன் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என்பதும் , இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்றால்…!? ‘கொம்பு சீவி’ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.