வீதி பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டள்ள வீதி பாதுகாப்பு உலகத் தொடர் (Road Safety World Series) 10 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பி.சி.சி.ஐ) அனுமதியுடன் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள இப்போட்டித் தொடரானது, முதல் அத்தியாயத்தை போலவே இம்முறையும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படவுள்ளது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றின் லெஜெண்ட்ஸ் அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன.
சச்சின் டெண்டுல்கர், சனத் ஜயசூரிய, பிரையன் லாரா, சமிந்த வாஸ், ஜொண்டி ரோட்ஸ், லான்ஸ் க்ளூஸ்னர், பிரெட் லீ , கிரேய்க் மெக் மிலன், இயன் பெல், அப்துர் ரசாக் ஆகிய கிரிக்கெட் நாயகர்களாக திகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டித் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை.
இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஏனைய ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதிக்கொள்ளும். புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் இரண்டு அணிகளும் ஒக்டோபர் முதலாம் திகதியன்று இடம்பெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் இந்திய மற்றும் தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. திலகரட்ண டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஜொண்டி ரோட்ஸ் தலைமையிலான தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. இப்போட்டி நாளை (11) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.