சக பத்திரிகையாளரை கொல்ல கூலிப்படையை ஏவிய, பெங்களூரை சேர்ந்த, கன்னட வார இதழ் ஆசிரியர் ரவி பெலகெரே கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர், பத்மநாபநகரில் வசித்து வருபவர் ரவி பெலகெரே. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற புலனாய்வு வார இதழான ‘ஹாய் பெங்களூர்’ என்ற இதழை நடத்தி வரும் ஆசிரியர் இவர். இந்த பத்திரிகை கர்நாடகாவில் நீண்டகாலமாக முன்னணி புலனாய்வு பத்திரிகையாக உள்ளது.
இந்த பத்திரிகையில் பணியாற்றி சமீபத்தில் வேலையை விட்டு வெளியேறியவர் சுனில் ஹெக்கரவள்ளி. கிரைம் நிருபராக இருந்த இவரும், ரவி பெலகெரேவும் 14 வருடகால நண்பர்கள். இந்த நிலையில், சுனிலை கொலை செய்ய கூலிப்படையை ஏவியதாக ரவி பெலகெரே பெங்களூர் நகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
சுனில் ஹெக்கரவள்ளிக்கும், ரவி பெலகெரே 2வது மனைவிக்கும் நடுவே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் பழி தீர்ப்பதற்காக கூலிப்படையை தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பெங்களூரில் பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் செப்டம்பர் மாதம், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையின்போது, கர்நாடகாவில் நாட்டு துப்பாக்கி விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கட்டம் கட்ட தொடங்கினர். அப்படித்தான் தாகீர் என்ற கள்ளத்துப்பாக்கி ஏஜென்டிடம் போலீசார் விசாரித்தனர். அவர் சசிதர் என்ற தனது கூட்டாளியை கை காட்டினார்.
இந்த விசாரணையின்போது ரவி பெலகெரே தங்களுக்கு பணம் கொடுத்து சுனிலை சுட்டு கொலை செய்ய சொன்னதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இவர்கள் இருவருமே குறி தப்பாமல் துப்பாக்கியால் சுடுவதில் வல்லவர்கள். புலனாய்வு பத்திரிகை துறையில் இருக்கும் ரவி பெலகெரேவுக்கு இந்த நிழலுலக நபர்கள் பழக்கம். அதன் அடிப்படையில் பணம் கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே, தான் ரவி பெலகெரேவின் நீண்ட கால நண்பன் என்றும், அவர் தன்னை சுட கூலிப்படையை ரெடி செய்தது அதிர்ச்சியாக இருப்பதாகவும் சுனில் தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்களை விமர்சனம் செய்து கட்டுரை எழுதியதாக ரவி பெலகெரேவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சமீபத்தில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் கோலிவாட் தண்டனை வித்திருந்தார். ஹைகோர்ட் அதற்கு இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.