முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச இருவருக்கும் எதிரான வழக்குகள் எதிர்வரும் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
அவன்கார்ட் வழக்கிலிருந்து தான் உள் ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல்செய்துள்ள மீள்பரிசீலனை மனு எதிர்வரும் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகளான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜகத் த சில்வா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார் எனக் குற்றம் சுமத்தி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்பட 4 சந்தேக நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அரச தலைவர் தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 992 மில்லியன் ரூபா நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அந்த அமைச்சின் முன்னாள் செயலர் நிகால் ஜயதிலக்க, வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க, அந்தத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று இடம்பெற்றதுடன், சாட்சியாளர்களும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். வழக்கு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது. சாட்சியாளர்களை அன்று மன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி ஆர்.குருசிங்க உத்தரவிட்டார்.

