முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவேண்டுமென்றோ அல்லது கைதுசெய்யப்படக்கூடாதென்றோ தாம் எந்தவித அழுத்தங்களையும் வழங்கவில்லையென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்து தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவை கைதுசெய்யுமாறு ஜனாதிபதி தரப்பிலிருந்தே அழுத்தங்கள் வழங்கப்படுவதாக வெளிவந்திருக்கும் செய்திகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த அமைச்சர்மார் இப்படியான கைது உடனடியாக இடம்பெற்றால் அது தேர்தல் கூட்டுக்காக மஹிந்த அணியுடன் நடத்தப்படும் பேச்சுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துமென சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி நீதிமன்ற மற்றும் பாதுகாப்புத் துறையின் செயற்பாடுகளில் தலையிடவோ அல்லது உத்தரவுகளையோ தாம் மேற்கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் உடனடியாக சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, கோட்டாபயவை கைதுசெய்வதற்கான உத்தரவை யார் பிறப்பித்தது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்த மூத்த அமைச்சர்கள் பலரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் செய்துவரும் முயற்சிகள் குறித்தும் விலாவாரியாக விளக்கிக் கூறியதாக மேலும் அறியமுடிந்தது.