கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 12 மில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்குழு மேற்கொண்ட ஆய்வுகளில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவ்விடயத்துடன் தொடர்புடைய 14 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்த வெடிப்புச் சம்பவத்தால் சேதமடைந்த சந்தைக் கடைகளை மீளத் திறப்பதற்கு இராணுவத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலங்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இவ்விடயம் தொடர்பான அறிக்கையை அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம்” எனவும் பிரிகேடியர் சுமித் தெரிவித்துள்ளார்.
சாலாவ இராணுவ முகாமில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் 47 பேர் காயமடைந்தனர். மேலும் 300க்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.