நாட்டில் கடந்த ஒரு மாதத்துடன் ஒப்பிடும் போது தொற்றாளர் எண்ணிக்கையில் கணிசமானளவு வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் இது திருப்தியடையக் கூடிய நிலைமை அல்ல என்று சுகாதார தரப்பினரும் , மருத்துவ சங்கங்களும் தெரிவித்துள்ளன.
எனவே அடுத்த வாரத்தின் பின்னரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் மருத்துவ தரப்பின் கோரிக்கையாகவுள்ளது.
நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிக்சை பெற்று வந்த வைத்தியயொருவர் சிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த குறித்த வைத்தியர் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையிலேயே நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இந்நிலையில் இன்றையதினம் மாலை வரை 1382 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய இது வரையில் 497 805 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 428 590 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 57 398 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 118 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 11 817 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 61 ஆண்களும் 57 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 95 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
அத்தோடு இலங்கையில் இதுவரையில் 13 649 253 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும் , 10 814 200 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.