கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் வருவாய்த்துறையினருக்கு சொந்தமான 390 ஏக்கர் நிலத்தில் கொய்மலர் பூங்கா, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல் மேற்கு மலைத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குளிர்பிரதேசம். கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலை பிரதேசத்தின் இயற்கை சீதோஷ்ணநிலை, மண்வளம், நீர்வளம் ஆகியவை தோட்டக்கலை பயிர் விவசாயத்திற்கு உகந்ததாக உள்ளது.
உற்பத்தி தரமும் உள்ளதால் உள்நாடு, வெளிநாடு சந்தைகளுக்கு ஏற்றதாக உள்ளது. மாறுபட்ட சீதோஷ்ணநிலை மற்றும் பனிப்பொழிவற்ற இரவு, பழங்கள் மலர்கள், காய்கறிகள் உற்பத்திக்கு உகந்ததாக உள்ளது.
மிகக்குளிர் பிரதேச பழவகைகளான ஆப்பிள், ஆப்பிரிக்காட், வால்நட், பாதாம், புளூபெரி, பிளாக் பெரி, போன்ற பழவகைகள் உற்பத்திக்கும் சாதகமானவை என நிருபிக்கப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் கொய் மலர்களின் தரம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஐரோப்பா, கிழக்கு ஆப்ரிக்க நாடுகள், கிழக்காசிய நாடுகளின் தரத்திற்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
இம்மலை பகுதியில் தோட்டக்கலை, விவசாய பயிர்களின் உற்பத்தியால் மலர்கள் காய்கறிகள், பழங்கள் சந்தை போட்டியுள்ளதாக மாறி வருகின்றன. இத்தைகைய சூழலில் நமது உற்பத்தி, அறுவடைக்கு முந்திய மற்றும் பிந்திய கட்டமைப்பு சந்தைக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மன்னவனுாரில் அமைக்கலாம்
இதுகுறித்து விவசாய ஆலோசகர் மூர்த்தி கூறியதாவது: மலைப்பகுதி விவசாய முன்னேற்றம், சமவெளி பகுதிகளை விட கடினமானது. இதனை மனதில் கொண்டு, பாராம்பரிய விவசாயத்தில் இருந்து மாறுபட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொய்மலர் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் அரசுக்கு வருவாய் அதிகரிப்பு, வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. புதிய உற்பத்தி வகையினங்களை உருவாக்கவும், சர்வதேச சந்தைகளின் அங்கீகரிப்பை பெறுவதற்கும் கொய்மலர், பழங்கள், காய்கறிகளின் புதியசந்தை வசதியில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
இதனை செயல்படுத்த கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அதனை தோட்டக்கலைத்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம். கொய்மலர்கள், பழங்கள், காய்கறிகள், பூங்கா அமைத்தால் மலை விவசாயம் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும். இதனால் மலைப்பகுதி மக்கள், இளைஞர்களின் வேலை வாயப்பு பெருகும். 400 ஏக்கர் நிலத்தில் கொய்மலர் பூங்கா அமைக்கவும், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.