கொக்குத்தொடுவாயில் தற்போது தமிழ்மக்களால் விவசாயம் செய்துவரும் நிலத்தினை கையகப்படுத்தி குடியேற்றும் முயற்சியை மேற்கொள்ளமுயலும் இடத்தினை மக்கள் சென்று பார்வையிட்டனர். மக்களோடு வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களும் இணைந்து குறித்த இடங்களை பார்வையிட்டார்.
இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் கருத்துத்தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு நாள்களாக கொக்குத்தொடுவாய் கோட்டக்கேணி தொடக்கம் மணல் இறக்கம் வரையான பகுதிகளில் குடியேற்றத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இதனால் இன்று ( 2017.07.19) மக்களுடன் முயற்சி மேற்கொள்ளப்படும் வெள்ளக்கல்லடி, தொட்டகண்டல்குளம், சிவந்தாமுறிப்பு ஆகிய இடங்களை பார்வையிட்டோம். நாங்கள் வருவதை அறிந்தோ, என்னவோ இன்று யாரையும் காணமுடியவில்லை. அவர்களால் எல்லைகள் நாட்டுவதற்கு வைக்கப்பட்ட எல்லைக்கற்கள் இருந்தன.
ஏற்கனவே இந்தப்பகுதி மக்களின் நீர்ப்பாசன மற்றும் மானாவாரிக்காணிகள் 2524 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர பெருந்தோட்டச்செய்கைக்கு என 33 பேருக்கு தலா இருபத்தைந்து ஏக்கர் வீதம் 825 ஏக்கர் கையகப்படுத்தியுள்ளார்கள். எஞ்சியுள்ள மிகக்குறைந்தளவு இடங்களில் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் இடங்களில் தமிழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இடங்களிலும் மகாவலி எல் என்ற போர்வையில் குடியேற்றமுயற்சி நடைபெறுவது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
வெள்ளக்கல்லடி, சிவந்தாமுறிப்பு, தொட்டகண்டல்குளம் எனப்படும் இவ்விடங்களை கையகப்படுத்தும் நோக்கம் என எண்ணுகிறேன்.
இப்பற்றியத்தை பிரதேச செயலாளர், மாவட்டச்செயலாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இக்கையகப்படுத்தல் நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் மக்களுடன் சென்று அவ்விடங்களில் அறப்போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிவரும். இவை தொடர்பிலான பற்றியங்களை மதிப்புறு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கும் உரியநடவடிக்கைக்காகவும் கொண்டுசெல்வேன் என்றும் தெரிவித்தார்.