தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தைச் சிவில் அமைப்பினரும் அரசியல் தலைவர்களும் பொறுப்பேற்று, கைதிகளைப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோருவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுப்பதற்காக அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு கூட்டம் கூட்டப்பட்டது.
இதற்கிணங்க இன்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுப்பதென நேற்று (12) நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலையை சட்ட பிரச்சினையாக பார்க்காது , அரசியல் பிரச்சினையாகப் பார்த்து கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இன்று சனிக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் இந்த வாக்குறுதியை வழங்கி அவர்களின் போராட்டத்தை முடித்து வைப்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் வரவு செலவுக்காலப்பகுதியைக் கைதிகளின் விடுதலைக்கான ஒரு துரும்பாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் , வடமாகாண சபை உறுப்பினர்களான பொ. ஐங்கரநேசன் , பா. கஜதீபன் , அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் உட்பட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் தலைமையில் காலை 11 மணியளவில் கூட்டம் ஆரம்பமானது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
பாதீட்டை பேரம் பேச பயன்படுத்துவோம் – சித்தார்த்தன்
த. சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில்,
உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுமாறு அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த போது கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் வாக்குறுதி தந்தால் போராட்டத்தைக் கைவிடுவதாக கூறினார்கள். அப்போது பிரதமருடன் பேச்சு நடத்தி முடிவு சொல்வதாகத் தெரிவித்திருக்கின்றேன். பிரதமருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியபோது, சட்ட மாஅதிபருடன் பேச்சு நடத்தாமல், எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார். எனினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை விட்டுவிட முடியாது. சிவில் சமூகம் அவர்களின் போராட்டத்தைக் கையில் எடுத்துப் போராட்டத்தை முன்னெடுப்போம். அவர்களின் போராட்டத்தை நாம் முடிவுறுத்துவோம்.
அடுத்த மாதம் நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன்போது பாதீட்டுக்கு வாக்களிக்கும் போது அரசியல் கைதிகளின் விடயத்தை பேரம் பேசலாம்.
அதற்கான அழுத்தத்தை நாம் வழங்கலாம். அரசாங்கத்திற்குக் கூட்டமைப்பு வழங்கும் அழுத்தம் போதுமானதாக இல்லை. அதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெளியில் நடக்கும் போராட்டங்களின் அழுத்தமும் போதாது. அவற்றுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிப்போம்” எனத் தெரிவித்தார்.
அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கையில், கைதிகளின் விடயத்தில் அனைத்துத் தமிழ் அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவிக்கையில், எல்லாப் பிரச்சனைகளில் இருந்தும் நாங்கள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம்.
அந்நிலையிலே நாம் தொடர்ந்து அரசியல் கைதிளின் விடுதலைக்குப் போராட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுக் கொழும்பு விசேட நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட கோமகன் கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அரசியல் கைதிகளிடம் இருந்தே ஆரம்பிக்கப் படுகின்றது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கபட்டிருந்த காலப் பகுதியில் எம்மை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சந்தித்தார்.அப்போது கடவுளை நான் நம்புறேன். என்னை நம்புங்கள், உங்கள் விடுதலையை சாத்தியமாக்குவோம் என வாக்குறுதி தந்தார். அப்போது நாம் அப்படி எமது விடுதலை சாத்தியமாகா விடின் என்ன செய்வீர்கள் எனக் கேட்டோம். அதற்கு அவர் நாம் வீதிக்கு வருவோம். உங்களுக்காகப் போராடுவோம் எனத் தெரிவித்தார். ஆனால், இன்னமும் விடுதலைகள் சாத்தியம் ஆகவில்லை. அவர்கள் வீதிக்கு வந்து போராடவும் இல்லை. அழுத்தம் கொடுக்கவில்லை.
சிறையில் எங்களுடைய ஆயுதம் உயிர் மற்றும் உணவும் தான். அவற்றை வைத்தே நாம் போராட முடியும் எனத் தெரிவித்தார்.