மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கைக்குண்டை வெடிக்கச்செய்ய முற்பட்டு, பதற்றத்தை ஏற்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக மது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைக்கலப்பாக மாறியுள்ளது.
இதனையடுத்து, குறித்த தந்தை கைக்குண்டொன்றை எடுத்துவந்து வெடிக்கச்செய்ய முற்பட்டுள்ளார். ஆனால், அந்த முயற்சி தடுக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக மடு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கைக்குண்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் பெரியபண்டிவிரிசான் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொலிஸார், படையினருடன் இணைந்து அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு வவுனியாவிலுள்ள குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.