கேரளாவுக்கு காய்கறி சப்ளை செய்ய முடியாததால், நெல்லையில் காய்கறிகள் விலை கடுமையாக சரிந்தது. இதுகுறித்து நெல்லை நயினார்குளம் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார் கூறியதாவது: நயினார்குளம் மார்க்கெட்டின் மொத்த வியாபாரத்தின் பெரும்பகுதி கேரளாவை நம்பியே உள்ளது. கடந்த ஒரு வாரமாக கேரளாவில் இருந்து காய்கறிகள் புக்கிங் செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. திருவனந்தபுரம் பகுதியில் இருந்து ஓரிரு வியாபாரிகள் மட்டுமே லோடு புக் செய்து செல்கின்றனர். மார்க்கெட்டில் தற்போது முட்டை கோஸ், தக்காளி மூடைகள் அதிகளவில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் வெள்ளம் தணிந்த பின்னரே வியாபாரம் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது’’ என்றார். இந்நிலையில் நயினார்குளம் மார்க்கெட்டில் சுமார் ஆயிரம் கிலோ அளவிலான முட்டைகோஸ் மூடைகள் அழுகிய நிலையில் காணப்படுகின்றன. வியாபாரிகள் வடமாநிலங்களில் இருந்து வரும் சரக்குகளை உடனுக்குடன் அனுப்பி வைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். உள்ளூர் வியாபாரத்தை மட்டுமே நம்பியிருப்பதால் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. நயினார்குளம் மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் மொத்த விலை விபரம்: (கிலோ கணக்கில்) கத்தரிக்காய் வரி ₹5, வெள்ளை ₹15, தக்காளி ₹7, நாட்டு தக்காளி ₹10, வெண்டைக்காய் ₹5, பீட்ரூட் ₹12, பூசணி ₹7, தடியங்காய் ₹9, முருங்கை ₹12, அவரை ₹15, பீன்ஸ் ₹15, பல்லாரி ₹15 என பல காய்கறிகளின் விலை சரிந்துவிட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

