விருந்தினர் மாளிகைகள், மருத்துவமனை உள்பட ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை டேராடூன் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு, அம்மாநில ஆளுநர் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதையடுத்து, கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். சிவபெருமானுக்கு ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தார்.
கடந்த 2013ம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 12 அடி உயர ஆதி சங்கரரின் சிலை அடித்து செல்லப்பட்டது. ஆதி சங்கரர் சமாதியும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2019ம் ஆண்டு முதல் அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு 12 அடி உயர, 35 டன் எடைக் கொண்ட ஆதி சங்கரரின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
மேலும், கேதார்நாத் கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் மோடி ஆய்வு செய்தார். இதேபோல், மந்தாகினி ஆற்றில் பாலம், தடுப்புச் சுவர், புரோகிதர்களுக்கான வீடுகள், விருந்தினர் மாளிகைகள், மருத்துவமனை உள்பட ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]