கூட்டு அரசு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவடையவேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சியில் கணிசமான தூரம் பயணம் செய்திருக்கின்றோம். அது முடிவடையவேண்டும். அதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் அவரது வீட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது-,
கூட்டு அரசு மகிந்த ராஜபக்சவின் அனுமதியைப் பெற்று ஆரம்பிக்கப்படவில்லை. மகிந்தவின் வெற்றி கூட்டு அரசைப் பாதிக்காது. கூட்டு அரசின் கொள்கைக்கும், மகிந்தவின் கொள்கைக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் இல்லை. கூட்டு அரசு நிறுவப்பட்டதன் பணிகளைத் தொடரவேண்டும். குறிப்பாக புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இந்தப் பணியில் கணிசமான தூரம் முன்னேறியிருக்கின்றோம். அது முடிவடையவேண்டும். அதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. மகிந்த ராஜபக்சவை எதிரியாகக் கருதவில்லை. அவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.உள்ளூராட்சித் தேர்தலில் அவர் பெற்றுக் கொண்டுள்ள வெற்றி அவரது கரத்தை மேலும் பலப்படுத்துகின்றது. அவர் தனது ஒற்றுமையைக் காட்டவேண்டும். புதிய அரசமைப்பு முயற்சிக்கு அவரது ஒத்துழைப்பை நான் பல தடவைகள் கோரியிருக்கின்றேன்.
தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதனைத் தீர்த்து வைப்பதாக அவர் பன்னாட்டுச் சமூகத்துக்கும் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதனை நிறைவேற்ற வேண்டும் – என்றார்.