ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைப்பும் இணைந்த கூட்டணி நாட்டை ஆட்சி செய்வதனையே மக்கள் விரும்புவதாக ஜாதிக ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஆட்சியமைக்கும் இக்கூட்டணி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை எதிர்க் கட்சியாகவும் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் படி தற்போதைய அரசாங்கத்தில் பாரிய மாற்றம் முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க, எதிர்வரும் 18 மாதங்களுக்குள் அரசாங்கம் உரிய முறையில் இதனை அணுக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கொள்கைகளில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வருடம் செப்டம்பரிலும் அடுத்த வருடம் ஏப்ரலிலும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்க நேரிடும். அதனைத் தொடர்ந்து 2020 இல் ஆட்சியைக் கைப்பற்றுவதென்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெறும் கனவாகவே இருக்கும்.
எவ்வாறாயினும், தற்போது மக்களின் ஆணையை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைப்புக்கும் இடையில் கூட்டணியொன்றை அமைப்பதுவே இதற்குரிய சிறந்த தீர்வாக அமையுமென்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.