வடக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதில் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. சபைகளின் நிர்வாகத்தை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியையும் இணைத்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள், வர்த்தக சங்கத்தாலும், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு தரப்புக்களுடன் முதல்கட்டப் பேச்சு முடிவடைந் துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுக ளின்படி வடக்கில் 27 உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு சபைகளில் கூடிய ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன. எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலமை எழுந்துள்ளது.
முன்னணியின் தலைவர்களுடன் நேற்றுச் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்பு டன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முன்னணி இணங்கவில்லை.
கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். முன்னணி எதிர்ப்பு வெளியிடாது.
கூட்டமைப்பின் நல்ல திட்டங்களை ஆதரிக்கும். தவறான விடயங்களை எதிர்க்கும். இதேபோன்று, முன்னணி ஆட்சி அமைக்கும் சபைகளில் கூட்டமைப்பும் செயற்படவேண்டும் என்று முன்னணியின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எந்தெந்த சபைகளில் தாங்கள் ஆட்சி அமைப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடிய பின்னர், நாளை அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளிலேயே கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனாலும் நல்லூர் பிரதேச சபையில் முன்னணி 5 ஆசனங்களையும், முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தலைமையிலான சுயேச்சைக் குழு 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. இரண்டு தரப்பும் இணைவது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைக்கு மேலதிகமாக நல்லூர் பிரதேச சபையிலும் ஆட்சி அமைப்பதற்கு முன்னணி கோரக் கூடும் என்று தெரியவருகின்றது. இதற்கு இணங்கினாலேயே, புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவதற்கு அந்தக் கட்சி தயாராக இருக்கும் என்று தெரியவருகின்றது.
கூட்டமைப்புச் சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் மார்ட்டின் வீதியில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
சபைகளை குழப்பகரமாக விடக் கூடாது என்று இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. சபைகளை சுமுகமாக முன்னெடுக்க வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் முயற்சி குறித்தும் பேசப்பட்டுள்ளது.