பாகிஸ்தானில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவ் மீது, பயங்கரவாதம், சதி என, பல வழக்குகளை, பாக்., பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவ். இவர், பாகிஸ்தானில் உளவு பார்த்தார் எனக் கூறி, அந்நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, பாக்., ராணுவ நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா தரப்பில் முறையிடப்பட்டது.
ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு, இடைக்கால தடை விதித்து, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. பாக்., சிறையிலேயே, ஜாதவ் தொடர்ந்து இருக்கிறார். இந்நிலையில், ஜாதவ் மீது, பயங்கரவாதம், சதி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் மீது விசாரணை நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இது பற்றி, பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான, ‘டான்’ வெளியிட்டுள்ள செய்தி: ஜாதவ் மீது, உளவு பார்த்தல், பயங்கரவாதம், சதி உட்பட, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில், உளவு பார்த்த வழக்கில் மட்டுமே, தீர்ப்பு வெளியாகி உள்ளது.இந்த வழக்குகள் தொடர்பாக, ௧௩ இந்திய அதிகாரிகளிடம் விசாரிக்க, அனுமதி கோரி, இந்தியாவுக்கு, பாக்., பலமுறை கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்தியா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
ஜாதவ், கடற்படையில் பணியாற்றியதற்கான ஆவணங்கள், அவரது ஓய்வூதிய வங்கிக் கணக்கு ஆகியவற்றையும், இந்தியாவிடம், பாக்., கேட்டுள்ளது.மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு, முபாரக் ஹுசேன் படேல் என்ற பெயரில், பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பாஸ்போர்ட் வழங்கியது யார்; அது, போலி பாஸ்போர்ட்டா என, இந்தியாவிடம், பாக்., கேட்டு உள்ளதற்கும் பதில் இல்லை. இந்த விவகாரத்தில், இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே, ஜாதவை காப்பாற்ற முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பாக்., விசாரிக்க அனுமதி கோரியதாக கூறப்பட்டுள்ள, ௧௩ இந்திய அதிகாரிகள் யார் என, அந்த நாளிதழில் தெரிவிக்கப்படவில்லை.