முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் பௌத்த அடையாளங்களை நிரந்தரமாக நிறுவும் நிர்மாணப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
முன்னதாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர் மலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வாராச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
குருந்தூர் மலையில் நான்கு மாதங்களாக நடைபெற்ற ஆய்வுகளின்போது அங்கு யாரும் செல்வதற்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு படையினரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்திடம் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் திடீரென கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி அவசர அவசரமாக முற்றுமுழுதாக படையினரின் ஏற்பாட்டில் குருந்தாவசோக ராஜ்மாஹா விகாரைக்கான பிரித்ஓதல் வழிபாடுகள் இடம்பெற்று விகாரை பூசைகள் தொடங்கி வைக்கப்பட்டன.
பின்னர், இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுதலிக்ககூடாது என்றும்ரூபவ் அங்குள்ள இந்து வழிபாட்டு இடங்கள் அகற்றப்படக்கூடாது என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் குருந்தூர் மலையில் எவ்விதமான நிர்மாணங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் குருந்தூர் மலையில் கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி அங்கு கட்டடம் ஒன்று நிறுவுவதற்கான அடிக்கல் ஒன்றும் நாட்டப்பட்டதோடு, மீண்டும் அப்பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகள் உட்பட எவருக்கும் அனுமதி முற்றாக மறுக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர் மலையினை பௌத்த மயப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம்.பியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகள் கடந்த பத்தாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குருந்தூர் மலையில் தொடர்ந்தும் பௌத்த சின்னங்களை நிறுவும் வகையிலான நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]